| தாயின் மணிக்கொடி பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல் தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு | ||
பல்லவி | ||
| தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! | ||
சரணங்கள் | ||
1. | ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன் உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே பாங்கின் எழுதித் திகழும்-செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! | (தாயின்) |
2. | பட்டுத் துகிலென லாமோ?-அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகந்தடித் தாலும்-அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் | (தாயின்) |
3. | இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்) மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? | (தாயின்) |
4. | கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் | (தாயின்) |
5. | அணியணி யாயவர் நிற்கும்-இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும்-விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! | (தாயின்) |
6. | செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந் தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். | (தாயின்) |
7. | கன்னடர் ஒட்டிய ரோடு-போரில் காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர், பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும் பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். | (தாயின்) |
8. | பூதலம் முற்றிடும் வரையும்-அறப் போர்விறல் யாவும் மறப்புறும் வரையும், மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் | (தாயின்) |
9. | பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத் தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். | (தாயின்) |
10. | சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! | (தாயின்) |
Saturday, 15 August 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment